கல்லகம் கிராமத்தில் சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லகம் கிராமத்தில் சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சியிலிருந்து பூவாளூர், வெள்ளனூர், புள்ளம்பாடி, கல்லக்குடி ஆகிய ஊர்களில் ஒதுக்குபுறமாக புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கல்லகம் கிராமத்தின் நடுவில் இந்த சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் கிராமமே இருபகுதியாக பிரிந்தது. இந்த நிலையில் பாடாலூரிலிருந்து அரியலூர் வரை பஸ், கனரகவாகனங்கள் செல்வதற்கு சாலையைக் கடப்பதற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த கிராமத்தின் 4 தெரு மக்கள் மயானத்துக்கு செல்வதற்கும் விவசாயிகள் தங்களின் சுமார் 1500 ஏக்கர் விளைநிலங்களுக்கும், பக்கத்து கிராமங்களான ஆங்கினூர், சன்னாவூர் செல்வதற்கும் தனியாக சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆனால் தேசியநெடுஞ்சாலை துறையினர் ஒரே கிராமத்தில் இரு சுரங்கப்பாதை வழங்க இயலாது என தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கல்லக்குடி போலீசார், லால்குடி தாசில்தார் சித்ரா, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வருகிற 15-ந்தேதி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தின் போது, சாலையின் நடுவிலேயே அடுப்பு வைத்து சமையல் செய்ய முயன்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.