திருச்சி கலெக்டர் அலுவலகம், மாநகராட்சியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கலெக்டர் அலுவலகம், மாநகராட்சியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தியாகிகள் நினைவாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக காந்தியடிகளின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும், பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயபிரித்தா, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசுப்ரமணியபிள்ளை, தேர்தல் தனி தாசில்தார் முத்துசாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
இதுபோல திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உறுதி மொழியை வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள் திருஞானம், சண்முகம், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.