சோமரசம்பேட்டையில் தைப்பூசத்தையொட்டி 5 சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி
தைப்பூசத்தையொட்டி சோமரசம்பேட்டையில் 5 சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் சிறப்பாக நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவர் முத்துகுமாரசாமி உய்யக்கொண்டான் வாய்க்காலில் தீர்த்தவாரி கண்டருளினார். அதன்பின்னர் வடகாபுத்தூரில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனை தொடர்ந்து நேற்று காலை 10. 30 மணிக்கு வடகாபுத்தூரில் இருந்து முத்துக்குமாரசாமி புறப்பட்டு உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர் காசி விஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 5 சுவாமிகளும் சோமரசம்பேட்டை 4 வீதிகளிலும் வலம் வந்து அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்குமேல் சுவாமிகள் ரத்தம் கோயிலுக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.