வாடகை கார் தொழில் நலிவடைந்ததால் டிரைவர் தற்கொலை
செங்குன்றம் அருகே வாடகை கார் தொழில் சரிவர லாபம் கிடைக்காததால் விரக்தியில் தீக்குளித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த விளவங்காடுபக்கம் சிருங்காவூர் தனியார் கம்பெனி அருகே சென்னை அடுத்த புழல் வ.உ.சி.தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 34) என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கிடந்தார். செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இவர், சொந்தமாக வாடகை கார் நடத்தி வந்த நிலையில், தொழில் சரிவர லாபம் கிடைக்காததால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், பொழிச்சலுார் தேவதாஸ் நகரை சேர்ந்தவர் காதர் பாஷா (41) கார்பெண்டரான இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாக, தனியாக வசித்து வந்தார்.
நேற்று மதியம் பொழிச்சலூர் ராஜேஸ்வரி நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்குள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.