பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் தர்ணா
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனா்.
பெரம்பலூர்,
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசி, துணை செயலாளர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிமேகலை, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் அகஸ்டின், அரியலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். முடிவில் பொருளாளர் சுமதி நன்றி கூறினார். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை தொடர்பான மனுவினை வழங்கினர்.