மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் உண்ணாவிரதம் வாபஸ்

சுவாமிமலை அருகே மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவரின் உண்ணாவிரதம், வைத்திலிங்கம் எம்.பி. பேச்சுவார்த்தையின் பேரில் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2021-01-29 17:29 GMT
கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவரின் உண்ணாவிரதம், வைத்திலிங்கம் எம்.பி. பேச்சுவார்த்தையின் பேரில் வாபஸ் பெறப்பட்டது. 

உண்ணாவிரதம்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்குலத்தோர் இன மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

 கள்ளர், அகமுடையார், மறவர் ஆகிய இனங்களை தேவர் இனத்துடன் சேர்க்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சுவாமிமலை அருகே உள்ள அசூர் புறவழிச்சாலையில் உள்ள தேவர் சிலை அருகே கடந்த 3 நாட்களாக சுமார் 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

பேச்சுவார்த்தை

அவரிடம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து 
முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் வைத்திலிங்கம் எம்.பி. இன்று காலை உண்ணாவிரதம் நடைெபற்ற இடத்திற்கு வருகை தந்து உண்ணாவிரதமிருந்த மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மத்திய அரசு

பேச்சுவார்த்தையில் முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி பெறப்பட்டு அவரிடம் அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி அவர் நல்ல முடிவு எடுப்பார் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும் மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவது மத்திய அரசின் முடிவு என்பதால் இந்த கோரிக்கையை மத்திய அரசி்டம் வலியுறுத்துவது என தெரிவிக்கப்பட்டது. 

இதை அனைவரும் ஏற்றுக் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த 3 நாட்களாக மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வபாண்டியன், மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் சுகுமாரன், அருமை துரை, ஒன்றிய தலைவர் சுகுமாறன், நகர செயலாளர் சோழா, உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்