கள்ளக்குறிச்சி : செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கள்ளக்குறிச்சி.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கேசவலு, செயலாளர் சுசீலா, பொருளாளர் பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மத்திய அரசின் செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படி வழங்க வேண்டும், கொரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்க ஊதியம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம் மற்றும் உயிரிழந்த செவிலியர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் செவிலியர் கண்காணிப்பாளர்கள் ராணி, சரோஜாதேவி உள்பட செவிலியர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.