ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் மீனவர்கள் போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள 9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் மீனவர்கள் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்,
இலங்கை சிறையில் உள்ள 9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் மீனவர்கள் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் போராட்டம்
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 14-ந் தேதி அன்று ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக தவித்து வரும் ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று 9 மீனவர்களின் குடும்பத்தினர் ராமேசுவரம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்திய பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை மீன்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
10-ந் தேதிக்குள்...
அப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வருகிற 10-ந் தேதிக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.