கோவை அருகே காட்டு யானை தாக்கி பெயிண்டர் பலி

கோவை அருகே கோவிலுக்கு வேலைக்கு சென்றபோது காட்டு யானை தாக்கி பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2021-01-29 16:03 GMT
யானை தாக்கியதில் இறந்த கார்த்திக்
பேரூர்

கோவை அருகே  நரசீபுரம் பகுதியில் ஆத்தூர் கிராமம் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான  கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. இதனை  கோவை செல்வபுரம், எல்.ஐ.சி., காலனியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 45) என்பவர் செய்து வந்தார். 

கடந்த சில வாரங்களாக இந்த வேலையில் அவர் ஈடுபட்டு வந்தார். கோவிலில் வேலை முடிந்ததும் அவர் தனது வீட்டுக்கு சென்று வந்தார்.

யானை தாக்கியது

இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற அவர்,  நேற்று  இரவு 9.30 மணிக்கு, தனது ஊரிலிருந்து நரசீபுரம் பகுதிக்கு பஸ்சில் சென்றார். பின்னர் அங்கிருந்து அந்த கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது திடீரென அந்த பகுதியில் மறைந்து நின்றிருந்த காட்டு யானை ஒன்று அங்கு ஓடிவந்து, கார்த்திக்கின் முதுகு பகுதியில் தனது துதிக்கையால் தாக்கியது. இதில் கார்த்திக் நிலைகுலைந்து கீழே விழுந்தார். 

சாவு

இதனை தொடர்ந்து அந்த யானை கார்த்திக்கின் மார்பு பகுதியில் மிதித்து விட்டு அங்கிருந்து சென்றது. இதனால் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். 

இதையடுத்து, உடனடியாக, இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்