சட்டமன்றத்தை கூட்டி நாராயணசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்
புதுவை சட்டமன்றத்தை கூட்டி நாராயணசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு சிலை
தமிழக அரசு நினைவிடம் அமைத்ததுடன் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். புதுவையிலும் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்குமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மாற்றிப்பேசுவதில் வல்லவர்
இடத்துக்கு இடம் மாற்றி பேசுவதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வல்லமை பெற்றவர். தேர்தல் அறிக்கையில் சொல்லியவற்றில் 85 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் என்னுடன்
நேரடியாக விவாதிக்க தயாரா?
அவரது கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்கிறார்கள். அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தார். அதன் நிலை என்ன? இப்போது நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் விலகி உள்ளனர். எனவே முதல்-அமைச்சர் நாராயணசாமி தானாக பதவி விலகவேண்டும். சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.
ஆளும் கட்சியில் இருந்து யார் விலகி எங்கள் கூட்டணி கட்சிகளில் இணைந்தாலும் வரவேற்போம். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இதுதொடர்பாக தலைமையை கேட்டு முடிவு எடுப்போம்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.