டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து நாகையில், மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை தலைமை தபால் நிலையம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரியார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் அமீது, ஷேக் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகை மாலி, காவிரி பாதுகாப்பு கூட்டியக்க தலைவர் தனபாலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன், கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும். மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு முழுமையான இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும்.
இழப்பீடு வழங்க வேண்டும்
பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாநில துணை செயலாளர் முபாரக் நன்றி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.