வேளாங்கண்ணி அருகே வாலிபர் கொலை வழக்கில் உறவினர் உள்பட 2 பேர் கைது
வேளாங்கண்ணி அருகே வாலிபர் கொலை வழக்கில் உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மகன் இளையராஜா (வயது33). இவர் ஆட்டு கறி வெட்டும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளையராஜாவை 3 பேர் வழிமறித்து தங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த உறவினரான சுப்பிரமணியன் மகன் முனியப்பன்(23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இளையராஜாவை முனியப்பன் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் அருள்(21), மதி மகன் சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்ெகாண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
இளையராஜாவின் அண்ணன் வீரசேகரனுக்கு முனியப்பனின் தங்கை முத்துலட்சுமியை கடந்த ஒரு ஆண்டு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் வீரசேகரனுக்கும், முத்துலட்சுமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து வசித்து வந்துள்ளார்.
2 பேர் கைது
இளையராஜா தனது அண்ணன் வீரசேகரனுக்கு முத்துலட்சுமியை பெண் பார்த்து முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். தனது தங்கை வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் இளையராஜா மீது ஆத்திரத்தில் இருந்து வந்த முனியப்பன் தனது நண்பர்களான அருள், சுரேசுடன் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். இ்வ்வாறு போலீசார் கூறினர்.
இதை தொடர்ந்து முனியப்பன், அருள் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுரேசை வலைவீசி ேதடி வருகின்றனர்.