கொற்கை ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு ஆணை கலெக்டர் சாந்தா வழங்கினார்
கொற்கை ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு ஆணையை கலெக்டர் சாந்தா வழங்கினார்.;
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கொற்கை ஊராட்சி பகுதியில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீட்டிற்கான ஆணையினை கலெக்டர் சாந்தா வழங்கினார். தொடர்ந்து வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் சாந்தா கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் மக்களை பாதுகாக்கின்ற வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது. அந்தவகையில் இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களது உயிர் மற்றும் உடைமைகளை காத்து கொள்கின்ற வகையிலும், தங்களது நிலையை உயர்த்தி கொள்கின்ற வகையிலும், குடிசை வீட்டை விட்டு நிலையான குடியிருப்பு வீடு அமைத்துக் கொள்ள ஏதுவாக தமிழக அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம் எடுத்து கூறி
எனவே தமிழக அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தினை பற்றி பொதுமக்களிடம் முழுமையாக எடுத்து கூறி, இத்திட்டத்தின் மூலம் வீடுகட்டி பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் உதவி திட்ட அலுவலர்கள் மங்கையர்கரசி, தமிழ்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், தாசில்தார் ஜெகதீசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.