உத்திரமேரூரில் கால்வாய் தோண்டும் போது அம்மன் சிலை கண்டெடுப்பு

உத்திரமேரூரில் கால்வாய் தோண்டும் போது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2021-01-29 03:51 GMT
உத்திரமேரூர், 

உத்திரமேரூர் குழம்பரகோவில் 2-வது தெருவில் உத்திரமேரூர் பேரூராட்சியின் சார்பாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. நேற்று காலை கால்வாய் தோண்டும்போது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதை அந்த பகுதி பொதுமக்கள் சுத்தம் செய்து பூஜை செய்து வழிபட்டனர்

இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் அந்த சிலையை ஆய்வு செய்து அது பிற்கால பல்லவர் காலத்தை சேர்ந்த அம்மன் சிலை என்பதை உறுதி செய்தனர்.

மேலும் இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில்:-

கால்வாய் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட இந்த மூத்த தேவி சிலையானது 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டதாக உள்ளது. வெண்கொற்றக்குடையின் கீழ் மகுடத்துடன் காதில் பத்ர குண்டலம் அணிந்து மார்பில் அணிகலன்கள் இடுப்பில் ஆடையுடன் அமர்ந்தநிலையில் உள்ளார். அவரது வலப்புறம் காக்கை உருவம் உள்ளது. இது அவரின் சின்னமாகும்.

வழிபாடு இல்லாமல்

மூத்த தேவிக்கு தவ்வை, ஜேஷ்டா தேவி என பெயர்களுண்டு. பல்லவர் காலத்தில் வழிபாட்டில் இருந்த அம்மன் நந்திவர்ம பல்லவனின் குல தெய்வமாக இருந்தவர். பிற்கால சோழர் காலத்தில் வழிபாட்டில் தொடர்ந்து தெய்வம் வலிமையின் அடையாளமாக போற்றப்பட்டவர் பின்பு மூத்த தேவி என்பது மருவி மூதேவியாக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போயுள்ளது. அடி பாகம் சற்று சிதைந்த நிலையில் காணப்படுகிறத.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்