மயிலாப்பூரில் தெப்ப உற்சவம்: முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா பக்தர்கள் சாமி தரிசனம்
தைப்பூசத்தையொட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தைப்பூசத் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. அதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;
சென்னை,
பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நேற்று காலை நடை திறக்கப்பட்டு காலை 6 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல் 12 மணிக்கு மூலவருக்கு ஆறு வகையான அபிஷேகம், உற்சவருக்கு பன்னீர் அபிஷேகம் நடந்தது. வள்ளலாருக்கு கண்ணாடி சேவை நடைபெற்றது. கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்பட்டன. இரவு 8 மணிக்கு உற்சவர் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.
மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவிலில் தைப்பூசத் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று இரவு 7 மணி அளவில் சந்திரசேகர சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி உலா வந்தார். பக்தர்கள் தெப்பக்குளத்தை சுற்றியிருந்து பார்வையிட்டனர். இன்றும், நாளையும் (30-ந்தேதி) சிங்காரவேலர் தெப்பம் நடக்கிறது.
வடபழனி முருகன் கோவில்
வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி முடிவுற்று காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அபிஷேக நேரம் நீங்கலாக தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மூலவர் அதிகாலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரை ராஜ அலங்காரத்திலும், பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்திலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்திலும் அருள்பாலித்தார். கோவிலின் தெற்கு கோபுர வாயில் இரண்டு வகை வரிசைகள் கட்டப்பட்டு பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்தனர்.
கோவிலில் திருப்பணி நடைபெற்று வருவதால் பக்தர்கள் நலன் கருதி, பால்குடம், காவடி மற்றும் அலகு குத்துதல் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் தைப்பூசத்தை முன்னிட்டு கட்டாய முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், உதவி ஆணையர் கே.சித்ராதேவி ஆகியோர் செய்து இருந்தனர்.
குன்றத்தூர்
தைப்பூச திருவிழாவையொட்டிபுகழ்பெற்ற குன்றத்தூர் முருகன் கோவிலில் நேற்று விசேஷ பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். அதிகாலையில் இருந்தே அதிக அளவில் பக்தர்கள் திரண்டதால் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் பக்தர்கள் உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஒரே வழி அமைக்கப்பட்டு இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.