தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
தைப்பூசத்தையொட்டி நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
தைப்பூசத்தையொட்டி திருச்சி சுந்தர் நகரில் உள்ள முருகன் கோவில் மற்றும் திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவிலில் நேற்று தைப்பூசத்தையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூைஜகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சாலை மட்டத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கல்லணை ரோடு சர்க்கார் பாளையத்தில்சோழனால் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலிலும் தைப்பூச விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் படித்துறையில் தீர்த்தவாரி கண்டு அருளினார்கள்.
முசிறியில் பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தா.பேட்டை அருகே தேவானூர் சண்முககிரி மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பக்தர்கள் பால்குடம், தீர்த்தகுடம் எடுத்து வந்து வழிபட்டனர். தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சந்தனகாப்பு அலங்காரத்தில் தண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று முசிறி, தா.பேட்டை பகுதியில் சிவாலயங்களில் உள்ள முருகப் பெருமானுக்கும் வழிபாடுகள் நடந்தது.
துறையூர் நகரில் உள்ள கரட்டுமலை முருகன், கோலோச்சும் முருகன், பாலக்கரை நந்திகேஸ்வரர், மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் ஆகிய கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது. கரட்டுமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற விழாவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விபூதி காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.
பின்னர் தேனுடன் கூடிய தினைமாவு, சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து சென்றனர். முன்னதாக கரட்டுமலை முன் உள்ள பிரம்மாண்ட பத்துமலை முருகனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு காவடி மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற வில்லை.
மண்ணச்சநல்லூரில் உள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று காலை முருக பக்தர்கள் கொள்ளிடத்தில் இருந்து தீர்த்தம் மற்றும் பால் காவடி எடுத்து வந்தனர். தொடர்ந்து முருகனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
மாலை பால்காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலுக்கு முன் தீ மிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதேபோல் சமயபுரம் போஜீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொட்டியம் பழைய சேலம் ரோடு பஜனைமடத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பாலமுருகனுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல ஜே.ஜே.நகர் முருகன் கோவில், தொட்டியம் அனலாடீஸ்வரர் சிவன் கோவில் மற்றும் அரசலூர் தாயுமானசுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், சுவாமி புறப்பாடு நடைபெற்றது.