நகைக்கடை அதிபர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீ்ட்டியது எப்படி?
சீர்காழி நகைக்கடை அதிபர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது எப்படி? என்பது குறித்து கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.;
சீர்காழி,
சீர்காழி நகைக்கடை அதிபர் தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக்குள் நுழைந்த வடமாநில கொள்ளையர்கள் நகைக்கடை அதிபரின் மனைவி-மகனை கொன்று வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். போலீசாரின் துரித நடவடிக்கையால் கொள்ளையர்கள் 3 பேர் பிடிபட்டனர்.
பிடிபட்ட 3 பேரையும் போலீசார், சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ேபாலீசாரின் தீவிர விசாரணையின்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
விசாரணையின்போது கொள்ளையர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-
நல்ல வசதி வாய்ப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி சங்கர்ராம் என்பவரிடம் மணிஷ் வேலை பார்த்து வந்தார். சங்கர் ராமிடம் இருந்து வெள்ளி பொருட்கள் கொடுப்பதற்காக சீர்காழியில் உள்ள தன்ராஜ் சவுத்ரி வீட்டிற்கு அடிக்கடி மணிஷ் வந்துள்ளார். அப்போது தன்ராஜ் சவுத்ரி நல்ல வசதி வாய்ப்புடன் இருப்பதை மணிஷ் தெரிந்து வைத்துள்ளார்.
கொள்ளையடிக்க திட்டம்
இந்த நிலையில் மணிஷ் நண்பரான ரமேஷ் பாட்டில் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவருக்கு போதிய பொருளாதாரம் இல்லாததால் திருமணத்தை வைத்துக்கொண்டு பணத்துக்கு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். தனது நண்பர் மணிஷ்சிடம், தனக்கு திருமணம் நடைபெற இருப்பதால் கையில் பணம் இல்லாமல் சிரமமாக உள்ளது. பணம் இல்லை என்றால் திருமணம் தடைபடும் என ரமேஷ் பாட்டில் கூறியுள்ளார்.
அதற்கு மணிஷ், சீர்காழியில் நகை வியாபாரி தன்ராஜ் சவுத்ரியிடம் நிறைய பணம், நகைகள் உள்ளது. அவர் நல்ல வசதியுடன் இருப்பதை நான் நன்கு அறிவேன். அவரது வீட்டில் கொள்ளையடித்தால் நமது தேவை பூர்த்தியாவதுடன் நாமும் அவரைப்போல் வசதியாக வாழலாம் என்று கூறியுள்ளார். இந்த திட்டத்தை தங்களது நண்பர்களான மஹிபால், கருணாராம் ஆகியோரிடம் அவர்கள் கூறி உள்ளனர். இந்த திட்டத்திற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து 4 பேரும் சேர்ந்து தன்ராஜ் சவுத்ரியின் வீட்டில் கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டினர்.
கொலை-கொள்ளை
தங்களது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு அவர்கள் ஒரு நாளையும் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலையில் கும்பகோணத்தை சேர்ந்த கருணாராம் ஒரு காரில் மற்ற 3 பேரையும் ஏற்றிக்கொண்டு சீர்காழி வந்துள்ளார். நீங்கள் மூன்று பேரும் சென்று தன்ராஜ் சவுத்ரி வீ்ட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு வாருங்கள். நான் இந்த இடத்தில் காருடன் தயாராக உள்ளேன். நீங்கள் வந்ததும் இங்கிருந்து நாம் சென்று விடுவோம் என்று கூறி சீ்ர்காழி புறவழிச்சாலையில் அவர்கள் 3 பேரையும் இறக்கி விட்டுள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி மஹிபால், மணிஷ், ரமேஷ் பாட்டில் ஆகிய 3 பேரும் தன்ராஜ் சவுத்ரி வீட்டிற்குள் சென்று நகை-பணம் இருக்கும் இடத்ைத கேட்டு உள்ளனர். அவர்கள் நகை-பணம் இருக்கும் இடத்தை தெரிவிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவர்கள் தாய்-மகன் இருவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.
வழிதெரியாமல் மாட்டிக்கொண்டனர்
பின்னர் தன்ராஜ் சவுத்ரியின் வீட்டில் நிறுத்தி இருந்த காரை எடுத்துக்கொண்டு புறவழிச்சாலைக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு கருணாராம் இல்லாததால் வழிதெரியாமல் கொள்ளையர்கள் 3 பேரும் சீர்காழி அருகே உள்ள பட்டவிளாகம் ரோட்டில் சென்று உள்ளனர். பணிகிருப்பு என்ற இடத்தில் கார் பழுதானதால் காரை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு வயல் வழியாக நகை-பணத்தை எடுத்துக்கொண்டு எருக்கூர் பகுதியில் உள்ள சவுக்கு காட்டிற்கு நடந்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வேலை பார்த்த விவசாயிகள் அந்த 3 பேரின் நடவடிக்கைகளையும் பார்த்து சந்தேகம் அடைந்து கொள்ளிடம் ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோதுதான் கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரை நோக்கி சுட முயன்றதும் பதிலுக்கு போலீசார் சுட்டதில் கொள்ளையர்களில் ஒருவன் பலியான சம்பவமும் நடந்து முடிந்தது.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.