சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் போராட்டம் தொடரும்
அரசின் கல்வி கட்டணத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனா்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அரசு கல்லூரிக்கு இணையான கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் தனியார் மருத்துவக்கல்லூரிகளை விட 30 சதவீதம் கூடுதலாக கல்வி கட்டணத்தை வசூலித்து வருவதாகவும், ஆகவே இதில் அரசு தலையிட்டு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறி கடந்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி முதல் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவ-மாணவிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாகவும், உடனடியாக பல்கலைக்கழக விடுதியில் இருந்து வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 21-ந்தேதி உத்தரவிட்டது. இருப்பினும் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் இரவு-பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 51-வது நாளாக நீடித்த இவர்களது போராட்டத்தில் அரசின் கல்வி கட்டணத்தை பெறக்கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்நிலையில் தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, தமிழக அரசின் சுகாதார துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் கூறுகையில், தமிழக அரசின் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு தற்போது சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவந்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த அரசாணையில் மாணவர்களின் கல்வி கட்டணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அரசின் கல்வி கட்டணத்தை பெறும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.