மங்களபுரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது

மங்களபுரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-01-28 23:09 GMT
ராசிபுரம்,


ராசிபுரம் தாலுகா மங்களபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட திம்மநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் சிவசங்கரன். மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ராணி (வயது 59). நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு ராணி நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த 3 வாலிபர்கள் ராணி அணிந்திருந்த 13 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதை சற்றும் எதிர்பாராத ராணி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதைக்கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தப்பியோடிய ஒருவரை பிடித்து கொண்டனர். பிறகு பிடிபட்டவரை பொதுமக்கள் மங்களபுரம் போலீசில் ஒப்படைத்தனர். 
3 பேர் கைது
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் ராசிபுரம் ரத்னா கார்டன் பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் மகன் விக்னேஷ் (19) என்பது தெரியவந்தது. மேலும் விக்னேஷ் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. இவர் கொடுத்த தகவலின் பேரில் மெட்டாலா அருகிலுள்ள கப்பலூத்து கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் விசுவநாதன் (30), என்பவரையும், கார்கூடல்பட்டி அருகிலுள்ள பாலக்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சுஜித் குமார் (23) என்பவரையும் மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுஜித்குமார் ஆயில்பட்டி பகுதியிலுள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ சிவில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். கைதான 3 பேரிடமும்  இருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்