ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று இரவு ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் சீர்வரிசை வழங்கப்பட்டது.

Update: 2021-01-28 23:02 GMT
ஸ்ரீரங்கம்,


சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கை. மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் கோவிலின் சார்புக் கோவிலாக இருந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழவகைகள், கரும்பு, தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி கொள்ளிடக்கரையில் நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி சமயபுரம் மாரியம்மன் நேற்று காலை கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்தார். அங்கு அம்மன் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சீர்வரிசை 

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் நேற்று இரவு மங்களப்பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு சீர்வரிசை பொருட்களை கோவில் அறங்காவலர்கள் சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, உதவிஆணையர் கந்தசாமி, அர்ச்சகர்கள் அறங்காவலர்கள், சமயபுரம் கோவில் இணை ஆணையர் அசோக்குமாரிடம் வழங்கினர். அதை கோவில் அர்ச்சகர்கள் அலுவலக பணியாளர்கள் பெற்றுக்கொண்டனர். 

இதையடுத்து அம்மனுக்கு ரெங்கநாதர் கோவில் பட்டுவஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன் தலைைமயிலான குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்