அறந்தாங்கியில் காலாவதியான உணவு பொருள் விற்பனை செய்த பேக்கரிக்கு ‘சீல்'
அறந்தாங்கியில் காலாவதியான உணவு பொருள் விற்பனை செய்த பேக்கரிக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
அறந்தாங்கி,
அறந்தாங்கி பெரிய கடை தெரு முக்கத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன் புதிதாக பேக்கரி ஒன்று திறக்கப்பட்டது. இந்த பேக்கரியில் கேக் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஜெகதாப்பட்டினம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மைதீன், அதே பகுதியை சேர்ந்த ரகுபுதீன், மெகராஜ் பேகம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த ரிஹானா (24) உள்ளிட்ட 12 பேர் பேக்கரியில் விற்பனை செய்யப்பட்ட 8 பீஸ் சவர்மாவை(கோழி இறைச்சி சேர்த்து தயாரிக்கப்படும் உணவு) வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
சாப்பி்ட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு கடுமையான வயிற்று வலியும், வயிற்று போக்கும் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேக்கரிக்கு ‘சீல்’
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் அவர்கள் புகார் அளித்தததை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு உத்தரவின்பேரில் நேற்று அறந்தாங்கி உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் சம்பந்தப்பட்ட பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அந்த பேக்கரியை இழுத்து மூடி ‘சீல்' வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.