மீன்சுருட்டி அருகே பரிதாபம்: ஏரி படிக்கட்டில் விளையாடிய சிறுவன் தண்ணீரில் மூழ்கி சாவு
மீன்சுருட்டி அருகே ஏரி படிக்கட்டில் விளையாடியபோது தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
டிரைவர்
செங்கல்பட்டு விவேகானந்த நகரை சேர்ந்தவர் குமார்(வயது 33). இவர் மறைமலை நகரில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா. இவர்களுக்கு தரணி என்ற மகள் மற்றும் தீபக்(வயது 6) என்ற மகன் இருந்தான்.
நேற்று முன்தினம் மீன்சுருட்டி அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவிற்காக, குமார் தனது தந்தை சாமிநாதன், தாய் பார்வதி, மனைவி ரம்யா மற்றும் குழந்தைகளுடன் வந்தார். மாலையில் அந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள அம்பலவாணன் ஏரியின் படிக்கட்டில் தீபக் விளையாடியதாக தெரிகிறது. அப்போது கால் தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கினான்.
சாவு
இந்நிலையில் தீபக்கை உறவினர்கள் தேடிப்பார்த்தபோது தீபக் அணிந்து இருந்த காலணிகள் ஏரி தண்ணீரில் மிதந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள், தண்ணீரில் இறங்கி தேடி தீபக்கை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு தீபக்கை பரிசோதனை செய்த டாக்டர், அவன் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.