வீட்டு வேலை செய்ய சொல்லி தாயார் திட்டியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

வீட்டு வேலை செய்யச்சொல்லி தாயார் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-01-28 21:26 GMT
 வீட்டு வேலை செய்யச்சொல்லி தாயார் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாயார் திட்டினார்
திருப்பூர் இடுவம்பாளையம் வஞ்சிபாளையம் தெற்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன் பனியன் தொழிலாளி. இவருடைய மனைவி கலாமணி. இவர்களுக்கு ஒரே மகள் தனுஸ்ரீ (வயது16), இடுவாய் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 

நேற்று தைப்பூசம் என்பதால் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் தனுஸ்ரீயின் தாயார் ஈடுபட்டிருந்தார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் தன்னுடன் சேர்ந்து வீட்டின் வேலையை செய்யுமாறு மகளிடம் கூறியுள்ளார். ஆனால் தனுஸ்ரீ வேலை செய்யாமல் செல்போனைப் பார்த்துக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. இதனால் தாயார் கோபமடைந்து தனுஸ்ரீயை கடுமையாக திட்டியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் கோபமடைந்த தனுஸ்ரீ வீட்டின் உள்ளே சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த தாயார், ஜன்னல் வழியே பார்த்துள்ளார். தனுஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருப்பவர்க்ளை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனுஸ்ரீ உயிரிழந்தது தெரியவந்தது.

 இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தனுஸ்ரீயின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்