புதுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டையில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூட்டை உடைத்து நகை திருட்டு
புதுக்கோட்டை எழில் நகரை சேர்ந்தவர் அமுதவல்லி (வயது 65). இவரது கணவர் இறந்து விட்டார். இதனால், வீட்டின் முதல் மாடியில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கீழ்தளத்தில் இருந்தவர்களுக்கு மாடியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வீட்டின் விளக்குகளை எரிய விட்டு வெளியே வந்து பார்த்தபோது மர்மநபர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து ஓடி விட்டார்.
பின்னர், வீட்டின் மேல் மாடிக்கு சென்று பார்த்தபோது கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அமுதவல்லிக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த தங்க வளையல், சங்கிலி, கம்மல் உள்பட 8 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.
வலைவீ்ச்சு
இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசில் அமுதவல்லி புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.