தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்த 2 கட்டிட தொழிலாளர்கள் மூச்சு திணறி பலி

கிருஷ்ணகிரியில் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த 2 கட்டிட தொழிலாளர்கள் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2021-01-28 19:03 GMT
தண்ணீர் தொட்டி புதுப்பிக்கும் பணி
தர்மபுரியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் உள்ள ஆனந்த் நகர் பகுதியில் பழைய வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த வீட்டை புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.இந்த நிலையில் அந்த வீட்டில் உள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியை (ஷம்ப்) புதுப்பிக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் கட்டிகானப்பள்ளி கீழ்புதூரை சேர்ந்த வெங்கடாசலபதி (வயது 40), முருகன் (55), சத்யசாய் நகரை சேர்ந்த பெரியசாமி (52) ஆகிய 3 கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

2 பேர் பலி
10 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்ட இந்த தண்ணீர் தொட்டிக்குள் 3 தொழிலாளர்கள் இறங்கிய உடன் ஒருவர் பின் ஒருவராக மூச்சு திணறி உள்ளே மயங்கி விழுந்தார்கள். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களை பரிசோதனை செய்ததில் பெரியசாமி மற்றும் முருகன் ஆகிய 2 பேரும் பலியானது தெரியவந்தது. வெங்கடாசலபதிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரியில் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்த 2 தொழிலாளர்கள் மூச்சு திணறி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்