பரமத்தி வேலூரில் கிணற்றில் விழுந்து சிறுவன் பலி பொதுமக்கள் 3 மணி நேரம் சாலை மறியல்

பரமத்தி வேலூரில் கிணற்றில் விழுந்து சிறுவன் பலியானான். இதையொட்டி பொதுமக்கள் 3 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-28 18:47 GMT
சிறுவன் பலி
பரமத்திவேலூர் வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மகன் குமரேசன் (வயது 8). அதே பகுதியில் உள்ள ‌அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களது காலனிக்கு அருகே விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றிற்கு அருகே சிறுவன் குமரேசன் நேற்று விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளான்.
இதையறிந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிணற்றில் இருந்து சிறுவனை மீட்க முயன்றுள்ளனர். சிறுவனை மீட்க முடியாததால் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சிறுவனை பிணமாக மீட்டனர். 

சாலை மறியல்
இந்த கிணற்றில் ஏற்கனவே 2 பேர் தவறி விழுந்துள்ளனர். இதில் ஒருவரை மட்டும் உயிருடன் மீட்டுள்ளனர். இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள விவசாய கிணற்றை சுற்றி வேலி அல்லது சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். 
இந்த நிலையில் நேற்று சிறுவன் அந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிணற்றின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், கிணற்றை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் வேலூர் - நாமக்கல் சாலையில் சிறுவன் குமரேசன் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து பாதிப்பு
இதுகுறி்த்து தகவல் அறிந்த பரமத்தி வேலூர் போலீசார் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவள்ளி, பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் சிறுவனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் உடனடியாக கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன்‌ அந்த பகுதியில் பரபரப்பும் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்