நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
சாத்தூர் அருகே நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அருப்புக்கோட்டை,
சாத்தூர் அருகே நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வாளரும், முதுகலைத்துறை பேராசிரியருமான விஜயராகவன் கூறியதாவது:-
மதுரை நாயக்கர் மன்னர் ஆண்டபோது பல குறுநில மன்னர்கள் பல பகுதிகளில் ஆண்டு வந்தனர்.அவற்றுள் ஒன்று சாத்தூர். அதைச்சுற்றி ஆட்சி செய்து வந்தவர்களை குறுநில மன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர். அந்த குறுநில மன்னர்கள் ஆண்ட எல்லைப் பகுதியை பாதுகாப்பதற்காக போர் வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.
அந்தப் போர் வீரர்களில் ஒருவர் இறந்தால் அவருடைய நினைவாக வீரக்கல் வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதேசமயம் வீரர்களான கணவன் இறந்த பிறகு மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. இதற்கென நிறுவப்பட்ட கல்லை சதிகல் என்று அழைத்தனர். இந்த வகையில் போர்வீரன் இறந்த பிறகு மனைவி உடன்கட்டை ஏறுவதற்கு சதிகற்கள் எழுப்பப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல்லானது 28 செ.மீ. உயரமும், 12.5 செ.மீ. அகலமும் கொண்டது. செதுக்கப்பட்டுள்ள ஆண் சிற்பமானது 19 செ.மீ. உயரமும், 7 செ.மீ. அகலமும் கொண்டது. இவரது தலையில் கொண்டை இடதுபக்கம் போடப்பட்டு உள்ளது. இவர்கள் முகத்தில் பெரிய மீசை செதுக்கப்பட்டு உள்ளது. காதிலும், கழுத்திலும் அணிகலன்கள் அணிந்து இருக்கிறார். இந்த வீரரின் வலது கையில் உள்ள வாள் மேல்நோக்கி செதுக்கப்பட்டு உள்ளது.
இதுபோரில் மரணமடைந்த வீரரின் அடையாளமாக உருவாக்கப்பட்டதாகும். இடது கையானது தொடையின் மேல் பகுதியில் வைத்த நிலையில் உள்ளது. இதனை கடியஸ்த முத்திரை என்று சிற்பவல்லுனர் கூறுகின்றனர்.
ஆண் சிற்பத்தின் அருகில் உள்ள பெண் சிற்பமானது 19 செ.மீ. உயரமும், 7 செ.மீ. அகலமும் கொண்டது. கொண்டை யானது இடது பக்கமாக செதுக்கப்பட்டு உள்ளது. இதை ஏகதளம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். காதுகளில் அணிகலன்கள் அணிந்துள்ள நிலையிலும், கழுத்திலும் முத்தாரம் என்ற அணிகலன் அணிந்துள்ளார். இடது கையில் அல்லிமலரை வைத்துள்ளார். வலது கையை தொடையின் மேல் பகுதியில் வைத்தது போன்றும் கடியஸ்த முத்திரையில் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த நடுகல் சிற்பமானது நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. தற்போது அங்குள்ள மக்கள் சேலைக்காரியம்மன் என்ற பெயர் சூட்டி வழிபட்டு வருகின்றனர்.