குளத்தில் விழுந்து சிறுவன் பலி
ஏலகிரி மலையில் குளத்தில் விழுந்து சிறுவன் பலியானான்.;
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 40). இவரது மனைவி பாப்பாத்தி (38). மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் கடந்த 11 வருடங்களாக இங்கு குடும்பத்துடன் வசித்து வரும் அவர் தனியார் விடுதி ஒன்றில் காவலாளியாக வேலையை செய்து வருகின்றார்.
இவர்களுக்கு அபிஷேக் (8), அஸ்வின் (6) என்ற 2 மகன்கள் உண்டு. அவர்கள் இருவரும் அந்தப்குதியில் உள்ள குளம் பகுதியில் விளையாடச் சென்று உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அபிஷேக் குளத்தில் விழுந்து விட்டான். இதுகுறித்து அஸ்வின் பக்கத்தில் உள்ளவரிடம் கூறியுள்ளான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்று சிறுவனை மீட்க முயற்சி செய்தனர். ஆனாலும் சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டான்.
இது குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாப்பாத்தி கொடுத்த புகாரின் பேரில் ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிறுவன் குளத்தில் விழுந்து இறந்ததுகூட தெரியாமல் தந்தை மது போதையில் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இது அந்தப்பகுதி பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.