திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுவா் பூங்கா திறப்பு

திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுவா் பூங்கா திறக்கப்பட்டது

Update: 2021-01-28 16:21 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு காவல்துறை தலைமையிட கூடுதல் இயக்குனரும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி.யுமான (பொறுப்பு) சீமா அகர்வால் இன்று திடீரென வருகை புரிந்தார். பின்னர் அவர் காவல் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குற்ற வழக்கு

அதனை தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை திறந்து வைத்து, அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, பேனா. பென்சில்கள் போன்றவற்றை வழங்கினார். 

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை கையாள்வது, புலன் விசாரணை மேற்கொள்வது, பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது, பெண்களுக்கு மறுசீரமைப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கியதோடு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் கிராமங்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

அப்போது டி.ஐ.ஜி. எழிலரசன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேசன், ராதாகிருஷ்ணன், ராஜன், இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, பிரபாவதி, லதா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்மணி, புனிதவள்ளி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமார், சீத்தாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்