15 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகவில்லை: கார் டிரைவர் கொலை வழக்கில் தலைமறைவான கொள்ளையன் கைது

கார் டிரைவரை கொலை செய்த வழக்கில், 15 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-01-28 04:16 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த நீலாங்கரை சேஷாத்ரி அவென்யூ பகுதியை சேர்ந்த ஷாஜகான் (வயது 21). கார் டிரைவர். கடந்த 2001-ம் ஆண்டு பயணிகள் போல் நடித்து இவரது காரில் சென்ற ராஜேஷ் (37) உள்பட 7 பேர் கத்திமுனையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷாஜகான் வெளியே சொல்லி விடுவார் என அச்சமடைந்த ராஜேஷ் உள்பட 7 பேர் நீலாங்கரைக்கு அவரை அழைத்து சென்று கொலை செய்துவிட்டு காரை திருடி சென்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவானவர் கைது

இந்த நிலையில், ஜாமீனில் வெளிவந்த ராஜேஷ் கடந்த 2005-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, ராஜேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவின் பேரில், நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் விஷ்வேஸ்வரய்யா கொண்ட தனிப்படையினர் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளையன் ராஜேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்