பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 31-ந்தேதி வழங்கப்படுகிறது

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 31-ந்தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது என மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-28 04:09 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1,644 சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் வருகிற 31-ந்தேதி நடைபெறும் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாமில் குழந்தைகள் அவசியம் சொட்டுமருந்து போட்டுக் கொள்ள வேண்டும். தீவிர போலியோ சொட்டுமருந்து குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு, பெருநகர சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரெயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

காலை 7 மணிக்கு...

அத்துடன் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

சொட்டு மருந்து முகாம்களில் பணி செய்ய பல்வேறு அரசுத் துறை பணியாளர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 6 ஆயிரத்து 700 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு 7.14 குழந்தைகளுக்கும், 2020-ம் ஆண்டு 7 லட்சம் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்