சசிகலாவின் விடுதலையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
சசிகலாவின் விடுதலையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
திருப்பூர்,
தேசிய தெய்வீக யாத்திரை என்ற பெயரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவன தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ., தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு நால்ரோடு பகுதிக்கு நேற்று வந்த கருணாஸ் எம்.எல்.ஏவிற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவுடன், 27 ஆண்டுகளுக்கு மேலாக உண்மையான விசுவாசியாக, அரசியல் ஆளுமையாக இருந்து கழகத்தையும், ஜெயலலிதாவையும் உண்மையாக நேசித்து வாழ்ந்தவர் சசிகலா. அவர் சிறைச்சாலையில் இருந்து விடுதலையானது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி. இதனை முக்குலத்தோர் புலிப்படை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. முக்குலத்தோர் புலிப்படை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு, அவரது ஆட்சிக்கு உறுதுணையாக தான் முக்குலத்தோர் புலிப்படை இருந்து வருகிறது.
25 சதவீத ஒதுக்கீடு
தற்போது வரை அ.தி.மு.க.வுடன் தான் தோழமை கட்சியாக இருக்கிறோம். வருகிற தேர்தலில் எங்களது தோழமை என்பதை தீர்மானிக்க வேண்டிய இடத்தில் அ.தி.மு.க. தலைமை தான் இருக்கிறது. அந்த தலைமை எங்களை அழைத்து பேசும்பட்சத்தில் எங்களது கோரிக்கைகளை முன்னிறுத்துவோம். வருகிற தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்போம். அ.தி.மு.க. இதுவரை கூட்டணிக்காக யாரையும் சந்தித்து பேசவில்லை.
இது தொடர்பாக குழுவும் அமைக்கவில்லை. தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நிச்சயமாக அவர் கூட்டணி கட்சியை அழைத்து பேசும் போது, எங்களையும் அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்போது எங்களது கோரிக்கையை தெரிவிப்போம். சென்னை நந்தனத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவரினம் என அறிவித்தார். இந்த அரசாணையை விரைவாக நிறைவேற்ற வேண்டும். மேலும், சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். முக்குலத்தோர் சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.