திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஊழியர்கள் தர்ணா
திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பொன்மலைப்பட்டி,
திருச்சி பொன்மலையில் ெரயில்வே பணிமனை உள்ளது. இங்கு ரெயில் பெட்டிகள் பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு, 4 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை பணிமனையில் வேலை பார்க்கும் ஒரு பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு வேலை பார்த்து வரும் கிளமென்ட் பர்னபாஸ் என்ற அதிகாரியை கண்டித்தும், அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் பணிமனை முதன்மை மேலாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த பணிமனை முதன்மை மேலாளர் ஷியாம்தர் ராம் தர்ணாவில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊழியர்கள் தரப்பில் அந்த அதிகாரி அதிக பணிச்சுமையை கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், ஊக்கத்தொகையை கொடுக்க மறுப்பதாகவும், ஊதிய உயர்வை தடுப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த அதிகாரியால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 4 பேரை மீண்டும் பணிமனையில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அதற்கு பணிமனை முதன்மை மேலாளர், உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். அதனை ஊழியர்கள் ஏற்று கலைந்து சென்றனர்.
இந்த தர்ணா போராட்டம் சுமார் 3 மணி நேரத்தி்ற்கும் மேலாக நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.