பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

திருச்செங்கோடு அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-01-28 01:49 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ராஜாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். லாரி டிரைவர். இவரது மனைவி கனகவள்ளி (வயது 32). இவர் திருமணமான 4 மாதங்களேயான நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம் திருச்செங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கனகவள்ளியிடம், வடிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வடிவேலை கைது செய்தனர்.

5 ஆண்டுகள் சிறை

இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட வடிவேலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட வடிவேலை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்