கரூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கரூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கரூர்,
கரூரில் பழமை வாய்ந்த, மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் கரூர் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் பழமை மாறாமல் திருப்பணிகள் நடந்து, நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 24-ந்தேதி காலை மங்கள இசை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ-பூஜை, பூர்வாங்க கோதானத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. மாலை கிராமசாந்தி, பிரவேச பலி, சாந்திஹோமம், வாஸ்து சாந்தி ம்ருத்ஸங்கிரகணம் நடந்தது.
25-ந்தேதி காலை சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், அக்னி சங்க்ரஹணமும், மாலை விநாயகர் வழிபாடு, புண்யாஹம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், யாத்ராதானம், யாகசாலை பிரவேசம், முதல்காலயாகபூஜை, திரவ்யாஹூதி மற்றும் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்றுமுன்தினம் காலை புண்யாஹம், இரண்டாம் காலயாகபூஜை மற்றும் மூலவருக்கு அஷ்டபந்தனம் மற்றும் ஸ்வர்ணபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
மாலை மூன்றாம்காலயாக பூஜை நடந்து முடிந்து சுவாமிக்கு சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று காலை 4 மணிக்கு மங்கள இசையும், 5 மணிக்கு திருமுறை இசையும், 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாஹம், நான்காம்காலயாக பூஜை உள்ளிட்ட பூஜைகள் முடிந்து மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் 9.30 மணியளவில் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து 9.45 மணியளவில் மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் ஓம் சக்தி.. பராசக்தி.. கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மூலவருக்கு மகாஅபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அர்ச்சனா ஓட்டல் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மாலை 6 மணியளவில் மாரியம்மன் தங்கரதத்தில் தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு திருவீதி உலாவும், இரவு 7.15 மணிக்கு வெள்ளி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) முதல் மண்டலபூஜை நடைபெறுகிறது.
கலந்து கொண்டவர்கள்
கும்பாபிஷேக விழாவில், மாரியம்மன் கோவில் அறங்காவலர் முத்துக்குமார், பாலாஜி சண்முகம், அர்ச்சனா ஓட்டல் பாலசுப்பிரமணியன், வேலவன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.