பெரம்பலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-27 22:55 GMT
பெரம்பலூர்,

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழகத்தில் வருவாய்த்துறையில் உள்ள அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணியினை வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கி அரசு ஆணையிட வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரின் போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் மொத்தம் 444 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 11 பேர் ஏற்கனவே மருத்துவ விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் 113 பேர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் மட்டும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெறிச்சோடி காணப்பட்டது

இதனால் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய 4 தாலுகா அலுவலகங்களில், அலுவலர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. அந்த அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது. தாலுகா அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தது.
அடுத்த மாதம்(பிப்ரவரி) 6-ந்தேதி சேலத்தில் நடைபெறவுள்ள கோரிக்கை மாநாட்டில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி 17-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்