திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

Update: 2021-01-27 16:53 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதில் மணப்பெண்ணாக இருந்த 5 சிறுமிகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

குழந்தை திருமணம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கிராமப்பகுதிகளில் போதிய விழிப்புணர்வு இன்றி தங்கள் குழந்தைகளுக்கு திருமண வயது எட்டாத நிலையில் பலர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்து விடுகின்றனர். பல்வேறு இடங்களில் குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் நேற்று  மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இதில் செங்கம், திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடைபெற உள்ளதாக ‘சைல்டு லைன்’ எண்ணிற்கு புகார்கள் வந்தன.
 
தடுத்து நிறுத்தம்

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ‘சைல்டு லைன்’ அதிகாரிகள், சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில் திருமண வயது நிரம்பாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த 14 குழந்தை திருமணங்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 6 திருமணங்களும், செங்கம் ஒன்றியத்தில் மூன்று திருமணங்களும், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 2 திருமணங்களும் மற்றும் சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், திருவண்ணாமலை ஒன்றியங்களில் தலா 1 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.

மணப்பெண்ணாக இருந்த 5 சிறுமிகள் மீட்கப்பட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்