கண்மாயில் குளிக்க சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி சாவு
கண்மாயில் குளிக்க சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி பலியானார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள குருமலை சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்பவர் திருமூர்த்தி. இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 53). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால், அவருடைய கணவர் திருமணமான சில மாதங்களில் பிரிந்து சென்றுவிட்டார்.
சுப்புலட்சுமி தனது அண்ணன் அய்யனார் மனைவி செல்லத்தாய் (55) என்பவருடன் குடியிருந்து வந்தார். சுப்புலட்சுமி குரு மலையிலுள்ள ராஜாங்கல் கண்மாயில் குளிக்கச் செல்வது வழக்கம். நேற்று மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சுப்புலட்சுமி இரவு வரை வீடு திரும்பாததால் செல்லத்தாய் கண்மாயில் போய்பார்த்தார்.
அங்கேபடிக்கட்டு அருகே சுப்புலட்சுமியின் சேலை கிடந்ததைப் பார்த்துள்ளார். கொப்பம்பட்டி போலீசில் செல்லத்தாய் புகார் செய்தார்.
போலீசார் கோவில்பட்டி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தீயணைப்பு படைவீரர்கள் அதிகாரி அருள்ராய் தலைமையில் இரவு முழுவதும் கண்மாயில் சுப்புலட்சுமியை தேடினர்.
இன்று காலை 7 மணியளவில் கண்மாயில் சுப்புலட்சுமி பிணம் மிதந்தது. தீயணைப்பு படை வீரர்களும், கிராம மக்களும் சேர்ந்து பிணத்தை வெளியே கொண்டு வந்தார்கள்.
கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்முருகன் சுப்புலட்சுமி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் குளிக்கச் சென்ற இடத்தில் சுப்புலட்சுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.