அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததால் பரபரப்பு
சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு
ஏரியூர்:
ஏரியூர் அருகே, அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக 5 கிராம மக்கள் அறிவித்து துண்டு பிரசுரம் வழங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கர்ப்பிணிகள் சிரமம்
ஏரியூர் ஒன்றியம், நாகமரை ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு ஏமனூர், மேற்கு ஏமனூர், ஆத்துமேட்டூர், சிங்காபுரம், ஆதிதிராவிடர் காலனி ஆகிய 5 கிராமங்களில் சுமார் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை அமைத்தும் பஸ் வசதி இல்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த கிராம மக்களுக்கு விவசாய நிலத்திற்கோ, வீடுகளுக்கோ இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஏமனூர் பகுதி காவிரி ஆற்றங்கரையில் தீவு போல் தனித்து இருப்பதால் அரசு அலுவலர்கள் யாரும் வருவது இல்லை. இதனால் இந்த கிராமங்களில் சாலை, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள், கர்ப்பிணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
துண்டு பிரசுரம் வினியோகம்
இந்த கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து நேற்று கிராம மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து துண்டு பிரசுரங்கள் வினிேயாகம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த கிராமங்களுக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதியோர் உதவித்தொகை, விலையில்லா ஆடு, மாடுகள், பசுமை, தொகுப்பு வீடுகள் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலை 5 கிராம மக்களும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.