காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2021-01-27 04:54 GMT
காஞ்சீபுரம்,

குடியரசு தினத்தையொட்டி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு, முவர்ண பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்க விட்டார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 77 பேருக்கு ரூ.54 லட்சத்து 21 ஆயிரத்து 415 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காவல்துறை, வருவாய்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

கலை நிகழ்ச்சிகள் இல்லாமல்

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இல்லாமல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் லட்சுமி பிரியா, மாவட்ட மக்கள் தொடர்பு துறை அதிகாரி திவாகர், காஞ்சீபுரம் தாசில்தார் பவானி மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்