திருச்சி தொழிற்சங்கத்தினர், விவசாயிகளின் இருசக்கர வாகன ஊர்வலத்தை தடுக்க முடியாமல் போலீசார் திணறல்; இரு தரப்பினரிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
திருச்சியில் தொழிற்சங்கத்தினர், விவசாயிகளின் இருசக்கர வாகன ஊர்வலத்தை தடுக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.
திருச்சி:
திருச்சியில் தொழிற்சங்கத்தினர், விவசாயிகளின் இருசக்கர வாகன ஊர்வலத்தை தடுக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.
பேரணி
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் நேற்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்க போராட்டக்குழுவினர் ஒருங்கிணைந்து திருச்சி கண்டோன்மெண்ட் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்
அதைத்தொடர்ந்து குடியரசு தினத்தில் தேசியக்கொடிகளுடன் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்திட தொழிற்சங்கத்தினர் முடிவு செய்தனர். அதற்காக, தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றுடன் திரண்டனர். ஊர்வலத்திற்கு முன்னதாக புதிய வேளாண் சட்டத்தின் பாதகம் குறித்து தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகி ஜோசப் நெல்சன், குணசேகரன் மற்றும் ரெங்கராஜன் (சி.ஐ.டி.யு.), சுரேஷ் (ஏ.ஐ.டி.யு.சி.), வெங்கட்ராமன் (ஐ.என்.டி.யு.சி.), அயிலை சிவசூரியன் (அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக்குழு), ஜான்சன் (எச்.எம்.எஸ்.), கே.சி.பழனிசாமி உள்பட பலர் பேசினார்கள்.
இந்த ஊர்வலத்திற்கு முதலில் அனுமதி அளித்த போலீசார் கடைசி கட்டத்தில் உயர் போலீசாரின் உத்தரவின் பேரில் அனுமதி மறுத்தனர். மேலும் அங்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் மணிகண்டன் மேற்பார்வையில் அதிவிரைவுப்படை போலீசாரும் லத்தி மற்றும் தடுப்புகளுடன் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவியது. ஆனாலும், போராட்டக்காரர்கள் அதை பெரிதுபடுத்தாமல், அமைதியாக இருசக்கர வாகன ஊர்வலத்தை நடத்திட வேண்டும் என்றும், சாலையில் 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்வலமாக செல்ல வேண்டும் என்றும், ஊர்வலம் பாரதிதாசன் சாலையில் முத்தரையர் சிலை, தலைமை தபால் நிலையம், ஜங்சன் ரவுண்டானா, மத்திய பஸ் நிலையம் வழியாக பெரியார் சிலை முன்பு முடிவடைவதாக அறிவுறுத்தி கொண்டிருந்தனர்.
போலீசாருடன் தள்ளு-முள்ளு
இந்த நிலையில் போலீஸ் தரப்பில், வாகன ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தொழிற்சங்கத்தினரும், விவசாயிகளும் திட்டமிட்டபடி இருசக்கர வாகனத்தில் சென்றே தீருவோம் என்பதில் உறுதியாக இருந்தனர். உடனடியாக போலீசார் உஷாராக பேரிகாட் (இரும்பு தடுப்பு) மற்றும் கயிறு கொண்டு தடை ஏற்படுத்தினர். அதே வேளையில் போராட்டக்காரர்கள், போலீசாரின் அராஜகம் ஒழிக.. என கோஷமிட்டப்படி பேரிகாட் தடுப்புகளை தூக்கி வீசிவிட்டு முன்னேற முயன்றனர். இதனால், போலீசாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதமாகி தள்ளு-முள்ளு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.
போலீசார் திணறல்
இதன் காரணமாக, எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா பகுதியில் வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசாருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி திணறலுக்கு உள்ளானார்கள்.
போலீசாரின் தடையை தகர்த்து இருசக்கர வாகனத்தில் தொழிற்சங்கத்தினர் முன்னேற முயன்றதும், அவர்களை போலீசார் தடுக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்ததும் எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா பகுதியே களேபரமாக காட்சி அளித்தது. கடைசி முயற்சியாக சாலைகளை அரசு பஸ்களை கொண்டும், மீட்பு வாகனத்தை கொண்டு நிறுத்தியும் போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர். போலீசாருடன் ஏற்பட்ட தள்ளு-முள்ளுவினால் சிலர் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். ஒருவருக்கொருவர் சட்டையை பிடித்து தள்ளும் அளவுக்கு நிலைமை சென்றது. ஆனாலும், விட்டேனா பார்..! என்பதுபோல போராட்டக்காரர்கள் மேலும் ஆவேசம் அடைய தொடங்கினர். போலீசாரை பிடித்து பலமாக தள்ளியபடி, தேசியக்கொடியுடன் ஒழிக கோஷம் எழுப்பியபடி முன்னேறினர். தடையாக இருந்த அரசு பஸ்சை டிரைவரிடம், தொழிற்சங்க நிர்வாகி எடுக்க சொன்னதும் அவரும் பஸ்சை எடுக்க தொடங்கினார். அதைக்கண்டு ஆத்திரம் அடைந்த போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, டிரைவரை, யாரை கேட்டு வண்டியை எடுக்கிறீர்கள்? என கடுமையாக கண்டித்தார்.
பிடியை விலக்கிய போலீசார்
போராடுபவர்களை முன்னேற விடாமல் தடுக்க போதிய போலீசார் இல்லாத காரணத்தால், போலீஸ் கமிஷனர் லோகநாதன் இறுதியாக இருசக்கர வாகன ஊர்வலத்தை அனுமதிக்க உத்தரவிட்டார். மேலும் சம்பவ இடத்திற்கு அவரும் விரைந்து வந்தார்.
போலீசாரின் கடுமையான பிடி விலக்கப்பட்டதால், அனைத்து தொழிற்சங்கத்தினரும், விவசாயிகளும் தேசிய கொடிகளுடன் அங்கிருந்து புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பியபடி அங்கிருந்து பாரதிதாசன் சாலையில் மாநகராட்சி அலுவலகம், பெரும்பிடுகு முத்தரையர் சிலை, தலைமை தபால் அலுவலகம், ஜங்சன் ரெயில்வே ரவுண்டானா வழியாக மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை சென்றடைந்தது. அங்கு வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷமிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
தடை உடைப்பு
போராட்டம் குறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரெங்கராஜன் கூறுகையில், ՙதமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் டிராக்டர் பேரணி, இருசகர வாகன பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். அதன்படி, திருச்சியிலும் நடத்திட எண்ணியபோது, டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இருசக்கர வாகன பேரணிக்கு மட்டும் போலீசார் அனுமதித்தனர். ஆனால், திடீரென்று இந்த ஊர்வலத்திற்கும் போலீஸ் உயர் அதிகாரி மறுத்ததன் பின்னணியில், அந்த தடையை மீறி 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் இருசக்கர பேரணியை திட்டமிட்டபடி நடத்தினோம். அதுவும், போலீசாரின் தடையை உடைத்துக்கொண்டு முன்னேறி சென்றோம்' என்றார்.