பரமத்திவேலூர் அருகே தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் செத்தன பொதுமக்கள் அச்சம்

தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் செத்தன.

Update: 2021-01-27 02:17 GMT
பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் அருகே தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் செத்தன. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

5 ஆடுகள் செத்தன

பரமத்திவேலூர் தாலுகா கொந்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் நல்லசிவம். கூலித்தொழிலாளி. இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை நல்லசிவம் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு‌ ஓடிச்சென்று பார்த்துள்ளார்.
அப்போது இரண்டு தெரு நாய்கள் ஆடுகளை‌ கடித்து குதறிவிட்டு‌ ஓடிச் சென்றுள்ளது. இதில் 5 ஆடுகள் செத்து கிடந்தன. மேலும் 2 ஆடுகள் உயிருக்கு போராடியதை பார்த்த நல்லசிவம் உடனடியாக வெங்கரையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அங்கு வந்த கால்நடை மருத்துவர் மணிவேல் மற்றும் அவரது குழுவினர் படுகாயமடைந்த ஆடுகளுக்கு உரிய சிகிச்சை  அளித்து வருகின்றனர். தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறி கொன்ற சம்பவம்‌ அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுமக்கள் அச்சம்

செத்த ஆடுகளின் மதிப்பு ரூ.25 ஆயிரம் வரை இருக்கலாம் எனவும், தெருவில் சுற்றி திரியும் தெரு‌ நாய்களை‌ பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நல்லசிவத்திற்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் அப்‌‌பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களையும் தெரு நாய்கள் கடிக்க‌ வாய்ப்புள்ளதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்