ஜெயங்கொண்டத்தில் விநாயகர் சிலையிடம் மனு அளித்த இந்து முன்னணியினர்
ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலையிடம் மனு அளித்தனா்.;
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தா.பழூர் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு இடையில் வரசித்தி விநாயகர் கோவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இந்த கோவில் அருகே கடை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த இந்து முன்னணியினர், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்து முன்னணியினர் நேற்று கோவிலில் நூதன முறையில் மனு அளித்தனர். அப்போது அவர்கள், விநாயகர் இருக்கும் இடத்தை அவரே காப்பாற்றிக் கொள்ளவும், தூய்மையாக வைத்துக்கொள்ளவும், சம்பந்தப்பட்டவர்களின் கனவில் அவர் தோன்றி கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று கூற வேண்டும் என்று வேண்டி, அந்த வாசகங்கள் எழுதப்பட்ட மனுவை விநாயகர் முன்பு வாசித்து, மனுவை விநாயகர் சிலை கையில் வைத்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராம.பாலமுருகன் தலைமையில் பழனிசாமி, நிர்வாகிகள் ரமேஷ், மணி, முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.