புதுச்சேரி முதல்-அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு முடித்துவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

கவர்னர் வீட்டுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது வழக்குப் பதிவு செய்யக்கோரிய மனுவை முடித்துவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2021-01-26 22:50 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘லோக் ஆயுக்தாவை அமல்படுத்தக் கோரி புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கவர்னர் அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி மனு அளித்தேன். ஆனால் போலீஸ் துறையை அணுகும்படி கவர்னர் அலுவலகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி நான் செய்த விண்ணப்பத்தை கிராண்ட் பஜார் போலீசார் நிராகரித்துவிட்டனர். அதைக் கண்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி வீடு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட என்னை போலீசார் கைது செய்தனர்’ என்று கூறியிருந்தார்.

வழக்கு பதிய வேண்டும்

மேலும் அந்த மனுவில், ‘முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், கவர்னர் வீட்டுக்கு முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் 6 நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரின் இந்தச் செயல் சட்டவிரோதமானதாகும். எனவே, முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

அரசியல் வேண்டாம்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், ‘அரசியலமைப்பு பொறுப்பு வகித்துவரும் முதல்-மந்திரிக்கும் கவர்னருக்கும் மோதல் இருந்தாலும், இந்த வழக்கு அரசியல் நோக்கோடு தொடரப்பட்டுள்ளதால், உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. அரசியல் மோதலை கோர்ட்டுக்கு வெளியே வைத்துக்கொள்ள வேண்டும். கோர்ட்டை அரசியல் களமாக பயன்படுத்தக்கூடாது’ என்று கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்