கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடி ஏற்றினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2021-01-26 17:37 GMT
தூத்துக்குடி,

இந்திய குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. 

விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் காலை 8.05 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்குக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களையும் கலெக்டர் பறக்க விட்டார்.

விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 353 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களும், தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் போகி பண்டியை அன்று நடத்தப்பட்ட தூய்மையான தூத்துக்குடி சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவி குழு, அரசு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து கூட்டுறவுத்துறையின் மூலம் பஞ்சாயத்து அளவிலான குழு கூட்டமைப்பு கடன் உதவி ரூ.80.50 லட்சம், மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோர் திட்டம் மானிய கடன் 13 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 29 ஆயிரத்து 968 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மகளிர் திட்டம் மூலம் வங்கி பெருங்கடன் மற்றும் அம்மா இருசக்கர வாகனம் 4 பயனாளிகளுக்கு ரூ.25.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 69 லட்சத்து 34 ஆயிரத்து 553 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

கொரோனா தொற்று காரணமாக அந்தந்த பகுதி தாசில்தார்கள் மூலம் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மேலும் வழக்கமாக நடைபெறக்கூடிய கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. குறைந்த அளவிலேயே பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின், ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சங்கரநாராயணன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து, பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து சமாதான புறாக்களை பறக்கவிட்டார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு சான்றிதழ்களையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,‘  தூத்துக்குடி விமான நிலைய வளர்ச்சி நல்ல முறையில் சென்று கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் விமான நிலைய மேலாளர் எஸ்.ஜெயராமன் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவனங்கள், பயணிகள், போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்