கச்சத்தீவை மீட்கக்கோரி தேசியக்கொடியுடன் இந்து அமைப்பினர் போராட்டம்

கச்சத்தீவை மீட்கக்கோரி தேசிய கொடியுடன் ராமேசுவரத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-01-26 17:25 GMT
தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சி.
ராமேசுவரம், 

மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை ரோந்து கப்பலை மோதி கொலை செய்த இலங்கை கடற்படையை கண்டித்தும், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தியும், ராமேசுவரத்தில் நேற்று சிவசேனா கட்சியினர் மாநில துணைத்தலைவர் புலவஞ்சி போஸ், மதுக்கூர் ஒன்றிய தலைவர் பிரபாகரன், திருவோனம் ஒன்றிய தலைவர் செல்வகுமார், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

பின்னர் அவர்கள் கச்சத்தீவுக்கு சென்று தேசியக்கொடி ஏற்றப்போவதாக கூறி தேசிய கொடியுடன் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதிக்கு ஊர்வலமாக வந்தனர். இலங்கை கடற்படையை கண்டித்து கோஷமிட்டபடி கடலுக்குள் இறங்கினர். 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி போலீஸ் சூப்பரண்டு தீபக் சிவாஜ் தலைமையில்  போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் சிவசேனா கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றி திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இதேபோல் இந்து தேசியக் கட்சியின் மாநில தலைவர் எஸ்.எஸ்.மணி தலைமையில் மாநில செயலாளர் ஹரிதாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், நகர் தலைவர் பிரபாகரன், நகர் பொதுச்செயலாளர் நல்லு குமார் உள்ளிட்டோர் கையில் தேசிய கொடியுடன் கச்சத்தீவுக்கு சென்று கொடியேற்றப்போவதாக கோவில் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேலும் செய்திகள்