வில்லிவாக்கத்தில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

நண்பர்களுடன் ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கிய பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-01-26 02:17 GMT
செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 7-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகன் ஆதித்யா(வயது 11). இவர், வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மதியம் இவர், தனது நண்பர்கள் 2 பேருடன் சிட்கோ நகர் அருகே உள்ள ஏரியில் குளிக்கச் சென்றார். ஆதித்யாவுக்கு நீச்சல் தெரியாததால் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர், சேற்றில் சிக்கிக்கொண்டு நீரில் மூழ்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். இதுபற்றி வில்லிவாக்கம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஏரியில் மூழ்கிய ஆதித்யாவை பிணமாக மீட்டனர். சேற்றில்சிக்கியதால் நீரில் மூழ்கிய ஆதித்யா, நண்பர்கள் கண் எதிரேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுபற்றி வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மாணவர் ஆதித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் செங்குன்றத்தை அடுத்த விலாங்காடுபாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(24). கட்டிடத்தொழிலாளியான இவர், தனது நண்பர்கள் 4 பேருடன் விலாங்காடுபாக்கம் பகுதியில் உள்ள குளத்தில் குளித்தார்.

நண்பர்கள் அனைவரும் நீண்டநேரமாக குளித்தபோது, சுரேஷ் குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுரேஷ் உடலை மீட்டனர்.

இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்