லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு கண்காணிப்பு கேமரா மூலம் வாலிபர் சிக்கினார்

திருவண்ணாமலை மாவட்டம், லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு கண்காணிப்பு கேமரா மூலம் வாலிபர் சிக்கினார்.

Update: 2021-01-26 02:04 GMT
பெரியபாளையம், 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, படிமம்பட்டு கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 23). டிரைவர். இவர் தான் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரியை திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பஜார் வீதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நேற்றுமுன்தினம் இரவு நிறுத்தி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ராமச்சந்திரனை கண் இமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்த நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணைக் கொண்டு சென்னை, புதிய வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் மெயின் ரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார் (32) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், தலைமறைவான மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்