மனைவி இறந்து போனதால் சோகம்: பழ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சீபுரத்தில் மனைவி இறந்து போனதால் சோகத்தில் தொடர்ந்து மது குடித்து வந்த பழ வியாபாரி தீராத வயிற்று வலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டு தெருவில் வசிப்பவர் செல்வம் (வயது 48). இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 5 வருடத்திற்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவரது மகன் அஜித்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் செல்வம் தவித்து வந்ததாக தெரிகிறது. அதன் காரணமாக அவர், தொடர்ந்து மது அருந்தி வந்த நிலையில், உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தீராத வயிற்று வலியால் தவித்து வந்த அவர், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது, கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து செல்வத்தின் மகன் அஜித் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.