ஆலங்குளம் அருகே கற்பூரம் சாப்பிட்ட குழந்தை சாவு

கற்பூரம் சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2021-01-26 01:11 GMT
குழந்தைகள் கையில் எளிதாக கிடைக்கும் வகையில், ஆபத்தான பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருேக நடந்த இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

1½ வயது குழந்தை 
ஆலங்குளத்தை அடுத்துள்ள ஓடைமறிச்சான் கிராமத்தை சேர்ந்தவர் யேசுராஜ் (வயது 36). இவர் ஆலங்குளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நிவேதா. இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற 1½ வயது பெண் குழந்தை இருந்தது. 
கடந்த 18-ந்தேதி இரவு நிவேதா தனது குழந்தைக்கு திருஷ்டி கழிக்க கற்பூரத்தை எடுத்து தடவினார். அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்ததால், கற்பூர டப்பாவை குழந்தையிடம் விளையாடுவதற்கு கொடுத்து விட்டு கற்பூரத்தை கொழுத்துவதற்காக நிவேதா வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

கற்பூரத்தை தின்று சாவு 
அப்போது குழந்தை ராஜேஸ்வரி டப்பாவை திறந்து அதில் இருந்த கற்பூர வில்லைகளை கையில் எடுத்து மிட்டாய் என நினைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கற்பூரத்தை கொளுத்தி விட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்த நிவேதா தனது குழந்தை கற்பூரத்தை சாப்பிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை ராஜேஸ்வரி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தது. 

சோகம் 
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
கற்பூரத்தை எடுத்து சாப்பிட்ட 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்